தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு: வழக்கு விசாரணை டிசம்பர் 14-ந் தேதிக்கு தள்ளி வைப்பு!

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம் தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் அளித்துள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை, மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை தொடங்கியதும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு தீர்வு காண இயலவில்லை என தெரிவித்தார்.

கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மோகன் காத்தர்கி, தமிழக அரசின் மனுவில் தீர்ப்பாயத்தை அமைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ”இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இரு மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, மேலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்” என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு இரு முறை கூடியது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி கூடியது. 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு கூடவில்லை. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதற்கு கர்நாடக அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு தீர்வு காண இயலவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கிறோம். வழக்கு விசாரணையை டிசம்பர் 14-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.