இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டி அடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறை பிடிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு சார்பில் பல முறை கடிதம் வாயிலாகவும், நேரடியாகவோ வலியுறுத்தப்பட்டு விட்டது. எனினும், இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.