தமிழக மக்களின் இதயங்களில் வாரணாசி வாழ்கிறது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் டிச.,16 வரை நடைபெற உள்ளது. இதனை நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகள் முதல் குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று(நவ.,16) கிளம்பினர். இந்த ரயில் இன்று பிற்பகல் சென்னை எழும்பூர் வந்தடைந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில், தமிழக குழுவினரை, கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் காசி சங்கமம் நிகழ்ச்சிக்கு வழியனுப்பி வைத்தனர்.
பிறகு கவர்னர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் மக்களின் இதயங்களில் வாரணாசி வாழ்கிறது. தமிழக மக்களின் நீண்ட நாள் கனவை இந்த பயணம் நிறைவேற்றும். நீண்ட காலமாக நம் நாட்டில் உள்ளதை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சி இது. ஒரே பாரதம் தான் உன்னத பாரதம். அதற்கும் இதுவே உதாரணமாக திகழ்கிறது. இந்தியாவை புரிந்து கொண்டவர்கள் பாரதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் வாரணாசிசிக்கு போக வேண்டும். வாரணாசியில் இருந்து இங்கு வர வேண்டும். அதுவே பாரதம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே பாரதம். காசிக்கு செல்ல வேண்டும் என்ற தமிழக மக்களின் ஆசையை நிறைவேற்றவே இந்த முயற்சியை பிரதமர் செய்துள்ளார்.
தமிழகத்திற்கும் வாரணாசிக்கும் கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக தொன்று தொட்டு தொடர்பு மற்றும் ஒற்றுமை இருந்து வருகிறது. தூரம் காரணமாக நாம் அதை தற்காலிகமாக மறந்து விட்டோம். நிரந்தரமாக அதை மறக்கவில்லை. அதை மீட்கும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. இங்கிருந்து காசி வெகுதூரமில்லை. பூகோள அளவிலேயே தூரமாக உள்ளது. காசியில் படகோட்டும் பலரும் என்னை விட நன்றாக தமிழில் பேசுவார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த கலாசாரம் தொடர்பாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி செல்லும் காசி தமிழ்ச் சங்க ரயிலை தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வரவேற்றார். பின்னர், ரயிலில் மாணவர்களுடன் சென்னைக்கு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காசியில் ஒரு மாத காலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு நேற்று முதல் சிறப்பு ரயில் துவங்கப்பட்டுள்ளது. முதல் ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து தமிழக மாணவர்கள் 216 பேருடன் வாரணாசிக்கு செல்கிறது. சென்னையில் இருந்து வாரணாசிக்கு ரயிலை வழி அனுப்புவதற்கு சென்னை ஐ.ஐ.டி., நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது முழுவதும் அரசு நிகழ்ச்சி. எனவே, பொதுமக்கள் இணைந்து காசி தமிழ்ச் சங்கப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக மாற்றுவது நமது கடமை.
தொடர்ந்து இன்னும் 11 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 19ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழக மாணவர்களை சந்தித்து பேசுகிறார். இது தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து பிரதமர் மோடியின் உணர்வு தமிழகத்தின் மீது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது. அவரின் இதயம் தமிழகத்திற்காக எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.