ராஜிவ் போன இடத்திற்கே ராகுலை அனுப்புவதாக மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தி உள்ள இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி துவக்கினார். இந்த யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களை கடந்து ஜம்மு காஷ்மீரை அடைய உள்ளது. தற்போது ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை கடந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். மேலும் மத்திய பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரைக்கு சமூக ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தினமும் பல்வேறு பிரபலங்கள் ராகுல் காந்தியுடன் இணைந்து பாரத் ஜோடோ யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாத்திரை செல்லும்போது பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கும். கமல்நாத் (மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்) சுட்டு வீழ்த்தப்படுவார். இந்த குண்டு வெடிப்பின் மூலம் ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தி இருக்கும் இடத்துக்கு அனுப்பப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்த கடிதம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஜூனி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஸ்வீட் கடை முன்பு கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலை மிரட்டல் கடிதம் எழுதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 507வது பிரிவில்(தகவல் தொடர்பு வகையில் மிரட்டி குற்றம் புரிதல்) அடையாளர் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கீழ் தேசிய பாதுகாப்பு சட்டமும் (National Security Act or NSA) பாய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் கமல் நாத், தற்போதைய பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதுபற்றி கமல்நாத் கூறுகையில், ‛‛பாரத் ஜோடோ யாத்திரை பாதுகாப்பை போலீசார் மேற்கொள்ள உள்ளனர். சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை வைத்தேன். அவர் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்” என்றார்.