ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள்: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், தமிழக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய கூட்டம், 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ்கரத், ஜி ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுக்கு அரசியல் விளக்கம், கட்சியின் வளர்ச்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரகாஷ்காரத் பேசியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் இந்துத்துவ ராஜ்யத்தை நிறுவவே திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. ஒற்றை கலாசாரம், ஒரே தலைமை என்பதே ஆர்எஸ்எஸ் திட்டம். இதற்கான திட்டத்தைத் தான் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இந்துத்துவம், அனைத்திலும் கார்ப்பரேட் மயம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்தி வருகிறார்கள். விவசாயிகள், தலித் பெண்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் மீது மோசமான வன்முறை தாக்குதல்கள் கட்டவிழுத்து விடப்படுகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்கள் வளர முயல்கிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள். திமுக அரசைச் சீர்குலைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆளுநரைப் பயன்படுத்துவது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி இன்னும் கூட பல நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் சூழ்ச்சிகளை உருவாக்கி வலுப்பெற அவர்கள் நினைக்கிறார்கள். மதவெறி கருத்துகள் குறிப்பாகக் கிராமப்புற மக்களிடம் அவர்கள் மதவெறி கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்புகின்றனர். நாடு முழுக்க மனுஸ்ருமிருதி, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க பாஜக தீவிரமாக முயல்கிறது. ஆனால், தமிழகம் இதை அனுமதிக்காது. இதனால் தான் மக்கள் அவர்களைக் கடுமையாக எதிர்கிறார்கள். இங்கு பாஜக 4 இடங்களில் எம்எல்ஏக்களை பெறவே அதிமுக காரணமாக இருந்தது. இதன் காரணமாகவே பாஜவுடன் இணைந்துள்ள அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பது நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.