ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கருக்கு சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் சிறைவாசலில் அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவரது சிறைத் தண்டனையை அண்மையில் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து அவர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதியப்பட்ட 4 வழக்குகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இது சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு குறித்த விவரங்களை பொதுவெளியில் எங்கும் பேசக்கூடாது என அறிவுறுத்தியது. இதனிடையே கடலூர் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் இன்று காலை ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறைவாசலுக்கே சென்று அவரது நண்பர்கள் பொன்னாடை அணிவித்து ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.