இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும் என்று சென்னை விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவுவிழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாக கொண்டுள்ளோம் என்றால், அதில் அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல, பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கின்றன. இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இந்த 15 மாத காலத்தில் ஏராளமாக புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழில் அதிபர்களை, தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி இத்துறையில் தொழிலாளர் நல வாரியம் மூலமாக பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஓய்வு இல்லப் புனரமைப்புக்காக நமது அரசால் தற்போது ரூ.7½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வாரியத்தின் உறுப்பினராக இணைந்து தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு தங்கள் பங்களிப்பை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் அமைதியான, இணக்கமான சூழ்நிலைக்கு இது இன்றியமையாதது. இந்த கூட்டமைப்பு அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களுடன் சிறந்த உறவை பேணி வருகிறது. மேலும், தொழில்துறை மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், தொழிலாளர் நலன் குறித்த விவகாரங்களில் தொழிற்சங்கத்துடன் தொடர்புகொண்டு செயல்பட்டுவருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழில்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முறையில் சுமுகமான உறவை ஏற்படுத்த தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் கொண்ட ஒரு குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
‘தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை’ என்பதை செயல்படுத்திவருகிறோம். இதுகுறித்த தகவல்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தொகுத்து வழங்கிவருகிறது. இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு, தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசின் குறிக்கோள். அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.