இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும்: ரனில் விக்ரமசிங்கே!

இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாகவும், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்படுகிறது. தனி ஈழம் கோரி நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை மீது போர் குற்றம் சுமத்தி விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தமிழா்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தின் வவுனியாவில் அதிபரின் கிளை அலுவலகத்தை ரணில் விக்ரமசிங்கே திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டுக்குள் தமிழா்களின் நிலம், குடியிருப்பு, விவசாயம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். முதலில் மக்களிடம் உள்ள அவநம்பிக்கையை களைய வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். நிலப் பிரச்னைக்கு தீா்வு காண எட்டு குழுக்கள் அமைக்கப்படும். பயங்கரவாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட வேண்டும். முஸ்லிம்களும் தங்கள் உரிமைகளை கோருகின்றனா். நாட்டை பிளவுபடுத்தாமல் சிங்களம், தமிழா்கள், முஸ்லிம் சமூகத்தினருடன் ஆலோசித்து அனைத்து பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டிய தருணம் இது. தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.