தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 36 மணி நேரத்தில் 15 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, சட்டம் – ஒழுங்கு மிகவும் சீா்கெட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ராஜ்பவனில் சந்தித்துப் பேசவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆளுநர் மாளிகையில், நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.