காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: தமிழக அரசு

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

மேகதாது அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்ற மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமில்லை. காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்கத் தடை வேண்டும்’ என தமிழக அரசு தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளது.