அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்க செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் மும்பை அடிப்படையாகக் கொண்டு மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் மற்றும் பாலாஜி மிசின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி 614 கோடி ரூபாய் மதிப்பில் 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, நிர்வகிக்கும் சேவைகளை வருடாந்திர அடிப்படையில் செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனங்கள் கால தாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 52 கோடி ரூபாய் பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகை தொடர்பாக ராஜன், அரசுக்கு கடிதம் அனுப்பியும் தொகை வராததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக அரசு கேபிள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு ஏற்பட்டதாக தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் அவசர மூறையீடு செய்யபட்டது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் அவசர முறையீடு செய்தார். அதில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனமும், அரசு கேபிள் டிவி நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பொது மக்கள் பாதிப்படைந்து உள்ளதாகவும், எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அவசர வழக்காக விசாரித்தார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவையை துண்டித்து மிரட்டல் எடுக்கக் கூடாது என வாதிட்டார். கேபிள் சேவையை துண்டித்து இடையூறு செய்வது சட்ட விரோதம் எனவும், எனவே கேபிள் சேவையை இடையூறு இல்லாமல் கொடுக்க தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி , கட்டணம் தரப்படவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்கக் கூடாது என்றும், பிரச்னை குறித்து மத்தியஸ்தர் மூலமாக தீர்வு காண வேண்டும் எனவும், மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும். மேலும் அரசு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.