எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது: தங்கம் தென்னரசு

ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்துப் பேசியதுடன், திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றையும் ஆளுநரிடம் அவர் அளித்துள்ளார். அதில், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், கோவை சிலிண்டர் வெடிப்பு உளவுத் துறையின் தோல்வி மட்டுமின்றி காவல்துறையின் அலட்சியத்தையும் காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்துப் பற்றாக்குறை உள்ளதாகவும், மழைநீர் வடிவால் பணி என்ற பெயரில் திமுக அரசு கஜானாவை காலி செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளித்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு. ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக கோரிக்கை மனுவாக வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். மேலும் பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்கு எழுகிறது.” என்றார்.

சென்னை பெருமழையை சந்தித்த போது, மழை நீர் தேங்காத வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களிடையே முதல்வர் ஸ்டாலின் பாராட்டு பெற்றுள்ளார். இதனை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளுநரிடம் சென்று பொய் புகார் அளித்துள்ளதாகவும் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, “ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது. அப்படி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அவர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்ததும் தமிழக காவல்துறை உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தது. தமிழக முதல்வர் உடனடியாக அதனை என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற பரிந்துரைத்தார். அங்கொன்றும், இங்கொன்றும் இருக்கக் கூடிய சில பிரச்சினைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சட்டம் – ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு மாயாஜால தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.” எனவும் சாடியுள்ளார்.

சட்டம் – ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு அடிப்படையில் எந்த தார்மீகமும் இல்லை என தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை. சாத்தான்குளம் காவல் நிலைய மரணம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் யாருடைய ஆட்சியில் நடந்தது என்பதை எல்லாம் வசதியாக எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டு, இன்றைக்கு திமுக அரசை பற்றி புகார் அளித்துள்ளார். அந்த சம்பவங்களின் போது, மனசாட்சி இல்லாமல் அப்போது செயல்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அருணா கெஜதீசன், அறுமுகசாமி ஆணையங்களின் அறிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தவர்கள்தான் அவர்கள்” என விமர்சித்துள்ளார்.

மருந்து பற்றாக்குறை இருப்பதாக ஒன்றை கண்டுபிடித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், மருந்து பற்றாக்குறை என்பது இல்லை. போதுமான கையிருப்பு உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளதை அவர் உறுதி செய்து வருகிறார் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும், முற்றிலும் உண்மைக்கு மாறான பொய்யின் வடிவமாக வேண்டுமென்றே நல்லாட்சியின் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்துள்ளார். மக்களிடம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்று எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.

ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புவது உள்நோக்கம் கொண்டதாகவே இருப்பதாக சுட்டிக்காட்டும் தங்கம் தென்னரசு, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அவர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.