சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கரியம்தான்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழாவில் மகளிரணி செயலாளர் நற்சோனை பேசியதன் தைரியத்தை வரவேற்பதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கரியம்தான் என்று கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணி விழா நிகழ்வு சென்னை திநகரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பு செயலாளர் நற்சோனை பேசினார். அவர் திருமாவளவன் முன்னிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனாதனம் நிலவுகிறது. விசிக ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுக.. நான் அனைத்தையும் ரெக்கார்டு செய்து வைத்துள்ளேன். அதை எல்லாம் காட்டுகிறேன். நமது கட்சியின் ஆண் சமூகம் இன்னமும் திருந்தவில்லை. ஆண் சமூகம் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம். ஆனால் சனாதனம் இன்னும் நம் கட்சியில் இருக்கிறது. டாப் டூ பாட்டம் வரை இருக்கிறது. அப்போது விசிக நிர்வாகி எழுந்து சென்று நற்சோனையின் பேச்சை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனாலும் அவர் ஆவேசமாக பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய மைக்கை ஆப் செய்தனர். அப்போது கீழே உட்கார்ந்திருந்த பெண்கள் நற்சோனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருமாவளவன் பேசியதாவது:-

பெண்களின் அரசியலை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். கட்சியில் ஒரு லட்சம் பேர் ஆண்கள் இருந்து 100 பேர் பெண்களாக இருந்தால் இந்த ஆதிக்கம் இயல்பாக வெளிப்படுகிறது. இதனை ஒழிக்க ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும். அரசியலில் பங்கற்கும் பெண்களைப் பற்றி இழிவாக மற்ற பெண்களே தான் பேசுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் அரசியலில் பங்கேற்றால் பெண்களை பற்றி இழிவாக யாரும் பேசமாட்டார்கள். நற்சோனை தன்னுடைய களப்பணிகளில் ஏற்பட்ட கசப்பை , பாதிப்பை உணர்ச்சிவசப்படாமல் இங்கே பேசினார். இது போன்ற முரண்பாடுகள் உரையாடல்களுக்கு வரும்போதுதான் அதற்கு தீர்வு காண முடியும். அவர் பேசியதை நான் வரவேற்கிறேன். தொடர்ந்து போராடுவதன் மூலம்தான் இந்த அவதூறுகளையும் அவமானங்களையும் வென்றெடுக்க முடியும்.

சனாதனத்தை எதிர்த்து வெகுண்டு எழுந்து இந்த மண்ணில் போராட வேண்டுமானால் பார்ப்பன சமூகத்து பெண்கள் உள்பட முதலில் பெண்கள்தான் போராட வீதிக்கு வர வேண்டும். இந்துச் சமூகம் என்பது பெண் ஒடுக்குமுறையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு கல்வியை தர வேண்டும். சமநீதியை தர வேண்டும் என்று சட்ட மசோதாவை உருவாக்கியவர் அம்பேத்கர். இந்துக்கள் என்றால் இவர்கள் அனைவரின் சடங்குகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொன்றும் ஏன் மாறுபடுகிறது?

இந்துத்துவா என்பது பாஜக ஆர்எஸ்எஸ், சங்பரிவாரின் கும்பலின் அரசியல். சங்பரிவாரின் முகமூடி அரசியல்தான் இந்துத்துவா. ஆனால் இந்துத்துவத்தில் இருக்கிற பாகுபாடுகளை ஒரு போதும் அவர்கள் பேசமாட்டார்கள். ஆண் பெண் பாகுபாடு, சமூகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகள் பற்றி பேசமாட்டார்கள். இப்படியான முகமூடி அரசியலைத்தான் செய்கிறார்கள். ஒரே ஒரு பாஜக , ஆர்எஸ்எஸ்காரன் வெளியில் வந்து மனுஸ்மிருதி எங்கள் கொள்கை இல்லை என சொல்ல முடியுமா? சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கரியம்தான். கொள்கை மூலம் பகைவர்களை இன்று நிலை குலைய வைத்திருக்கிறோம். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் கொள்கைகளை உள்ளத்தில் ஏந்தி நமது கொள்கை பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். இந்த கட்சியை வழி நடத்துவதில் திருமாவளவன் என்றைக்கும் உங்கள் நம்பிக்கைக்குரியவனாக இருப்பான். இந்து சமூகம் பாகுபாடுகளால் நிறைந்தது. ஆதிக்கம் போன்ற கோட்பாடுகளால் இந்த சமூகம் சாதிய மத வர்க்க ஏகாதிபத்திய முரண்பாடுகளால் இந்த மண் புரையோடி கிடக்கிறது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.