ஷ்ரத்தா கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: அமித்ஷா

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு டெல்லி காவல்துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

நான் இந்த வழக்கு முழுவதையும் கவனித்து வருகிறேன். இந்த கொலை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு குறுகிய காலத்தில் கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவேன். டெல்லி மற்றும் மும்பை காவல் துறைக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு உள்ளது. ஆனால், மும்பை காவல் துறையில் ஷ்ரத்தா அளித்த புகாரில் டெல்லி காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியாது.

மகாராஷ்டிர காவல் நிலையத்தில் ஷ்ரத்தா, அப்தாப் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், துண்டு துண்டாக வெட்டிவிடுவார் எனவும் புகார் அளித்துள்ளார். அப்போது அவரது புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் மகாராஷ்டிரத்தில் எங்களுடைய ஆட்சி இல்லை. இந்த கொலைக்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் அளித்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிவதற்கான விசாரணை தொடங்கியிருப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். புகார் கொடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஷ்ரத்தா வாக்கார் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் பட்னவீஸ் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பல்காரில் உள்ள துலிஞ்ச் காவல்நிலையத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு, ஷ்ரத்தா வாக்கர், அப்தாப் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகார் கொடுத்துள்ளார். காவல்நிலையத்தில் ஷ்ரத்தா அளித்த கடிதத்தை தான் பார்த்ததாகவும், அதில் மிக மோசமான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அப்போது ஏன் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்போது விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்டுவது எனது நோக்கமல்ல, ஒரு வேளை புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று பட்னவீஸ் கூறியுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர காவல்துறையினர் கூறுகையில், 2020ஆம் ஆண்டு ஷ்ரத்தா புகார் அளித்த போது நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். ஆனால் ஒரு சில நாள்களிலேயே தனது புகாரை திரும்பப்பெறுவதாக ஷ்ரத்தா எழுத்துப்பூர்வமாக மனு அளித்ததால் விசாரணையை நிறுத்தியதாகக் கூறுகிறார்கள்.