தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று கூறினார்.

புதுக்கேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அரசு அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து அதிகாரிகள் தான் இப்போதும் உள்ளனர். அந்த அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் இருந்தது போலவே தான், இப்போதும் திமுக ஆட்சியில் செல்வாக்காக உள்ளனர். இதனால் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. சட்ட ஒழுங்கு தற்போது வரை திமுக கூட்டணியில் தான் வாழ்வுரிமை கட்சி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி எதைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. எந்தச் சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார் என்பதைக் கூறினால் அதற்குத் தகுந்தாற்போல் பதில் கூற முடியும். மாநிலத்தில் அங்கு ஒன்றும் இங்கொன்றுமாக நடக்கும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இவ்வாறு கூறுவது என்பது ஏற்புடையது அல்ல.

தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருவது என்பதை மறுப்பதற்கு இல்லை. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு என்று ஒரு செல்வாக்கு கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது பெருகி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. திமுக பொதுச்செயலாளர் மட்டுமல்லாது பல்வேறு திமுக நிர்வாகிகளும் கூட பாஜக வளர்ந்து வருவதை மறுக்கவில்லை. அவர்களுக்கும் இது தெரிந்தே இருக்கிறது. 50 ஆண்டுக் காலம் திராவிட கட்சியைத் தமிழக இளைஞர்கள் பார்த்து இருக்கிறார்கள். இப்போது ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் இயங்கும் பாஜகவைப் பார்த்து இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் பாஜகவில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே, பாஜகவின் வளர்ச்சியை அரசியல் கட்சிகள் மிகவும் கவனத்துடனேயே கையாள வேண்டும்.

வரும் காலத்தில் சீமான் உடன் அரசியல் களத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். அப்போதுள்ள அரசியலைச் சூழலை வைத்து முடிவு செய்யப்படும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் 2026இல் முதலமைச்சராக வர வாய்ப்பு கிடைத்தால் முதல் ஆளாகப் பாராட்டி வரவேற்பவன் நானாகவே இருப்பேன். மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஆறு பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தாலும் இவர்கள் விடுதலை செய்ததில் எந்த விதமான மாற்றமும் வரப்போவது கிடையாது. இதேபோல விடுதலை செய்யப்பட்ட நான்கு பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறப்பு முகாம் என்பதே ஒரு வகையில் சிறை தான். ஒரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள், இப்போது மற்றொரு சிறையில் தண்டனையை அனுபவிப்பது போல தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக நான்கு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஆளுநர் பேசக்கூடாத கருத்துக்களை ஆளுநர் பேசி வருகிறார். காசியில் நடைபெற்று வரும் தமிழ்ச் சங்கமம் என்பது அரசு விழாவாகவே நடத்தப்படுகிறது. அப்படி அரசு விழாவில் தமிழக முதல்வரை அழைக்காமல் விழா நடத்துவது என்பது கண்டிக்கத்தக்கது. குறைந்தது மக்களவை உறுப்பினர்கள் யாரையாவது அழைத்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் அப்படி எதையுமே செய்யவில்லை. தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைத்துச் சென்று ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிப்பதே இவர்களின் திட்டம். இதற்காகவே இவர்கள் தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.