டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்தது: அமித்ஷா!

குஜராத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகதான் வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. 2017 தேர்தலில் வெற்றி பெறுவது பாஜவுக்கு கொஞ்சம் கடினமாகதான் இருந்தது. ஏனெனில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் மொத்தம் 47.85 சதவிகிதம். எதிர்க்கட்சியாக வந்த காங்கிரசுக்கு 38.93 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. கொஞ்சம் ‘மிஸ்’ ஆகியிருந்தாலும் பாஜகவின் வெற்றி பாதிக்கப்பட்டிருக்கும். எனவே இந்த தேர்தலில் தனது முழு பலத்தையும் கட்சி பயன்படுத்தி வருகிறது.

பிரசாரங்களில் பிரதமர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என பல முக்கிய தலைகளை பாஜக களம் இறக்கியிருக்கிறது. அந்த வகையில் இன்று ராஜ்கோட் பகுதியில் நடந்த பிரமாண்ட பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவர் பேசியதாவது:-

குஜராத்துக்கு காங்கிரஸ் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து குஜராத்தின் தண்ணீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வை காங்கிரஸ் காணவில்லை. ராஜ்கோட் மாவட்டத்தின் தண்ணீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது பாஜகதான். ஆனால் இதற்கான முன்முயற்சி நேரு காலத்திலேயே எடுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க ‘சர்தார் சரோவர்’ அணை திட்டத்தை அப்போதைய பிரதமர் நேரு 1963ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் இந்த திட்டம் 1963 முதல் 2002 வரை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. அதேபோல 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தின் நர்மதா தண்ணீரை பெறுவதற்கு போராட வேண்டி இருந்தது. காங்கிரஸ் செய்தது எல்லாம் இதுதான். காங்கிரஸால் குஜராத்திற்கே பெரிய அவமானம் ஏற்பட்டது. இது மட்டுமா? நாட்டின் தலைசிறந்த தலைவரான டாக்டர் பி.ஆர் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வந்தது. அவர்கள் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கூட வழங்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.