பயங்கரவாத சமூகத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள் தோல்வியடைவர்: கவர்னர் ரவி

நம் நாட்டில் பயங்கரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களால் அதில் வெற்றி பெற முடியாது எனவும் கவர்னர் ரவி பேசியுள்ளார்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று துவங்கியது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து கவர்னர் ரவி பேசியதாவது:-

கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி. பாரத மாதாவின் பாதங்கள் படிந்துள்ள பகுதியாகவும், அருளாசி நிறைந்த பகுதியாகவும் முக்கடலும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது. விவேகானந்தர் தேசியத்தின் பார்வையில் படுவதற்கு முன்பு, அவரது கன்னியாகுமரி வருகை அமைந்துள்ளது. அதன்பிறகு அவர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை, இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகுக்கு சொல்லும் விதமாக அமைந்தது. எனது கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இருபெரும் மகான்களில் ஒருவர், ஸ்ரீராமானுஜர். மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். தற்போது அவர்களது அருள் நிறைந்த விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் ராமானுஜர் விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக உணர்கிறேன்.

இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வரவேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள், இந்தியாவில் ஒரு இன அருள் புரட்சியை உருவாக்கி உள்ளது. மதத்தின் திறவு கோல்களாக ராமானுஜரும், விவேகானந்தரும் இருந்தார்கள். இந்த பாரத திருநாட்டில், பயங்கரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியாது.

கன்னியாகுமரியில் நாளை திறக்கப்பட இருக்கும் ஸ்ரீராமானுஜர் சிலையானது, தென்கோடிக்கு அருள்பாலிக்கும் அடையாளமாக திகழும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் இதுவரை, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர். அதேபோல் ஸ்ரீராமானுஜர் சிலையும் சுற்றுலா பயணிகள் தரிசித்து செல்லும் இடமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.