தமிழகத்தில் இனி ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர் தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், அதற்கு அளவீடு என்னவென்றும் ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் ஆளுநர் கேள்விக்கு அரசு தரப்பில் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட இன்றே கடைசி நாளாகும்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முன்னோடிகளை சந்தித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடி வருகிறார். அதன்படி நாகையில் தனியார் திருமண அரங்கில் நடந்த பாமக கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தொழிற்சாலைகளில் 80% வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு கையெழுத்திட இன்று கடைசி நாள் என்பதால் ஆளூநர் இன்றைக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும், தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல.
தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்யாமல் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, ஆளுநரும், தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.