சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.
தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி இன்று காலையில் எழுந்ததும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு பட்டு வேஷ்டியை சால்வையாக அணிவித்தார். பின்னர் உதயநிதியின் தோளை தட்டிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு உதயநிதியின் தோளில் கைபோட்டு அருகே அரவணைத்து வாழ்த்தினார். அப்போது அருகில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்த உறவினர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரிய கருப்பன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அங்கு திரண்டிருந்தனர். அவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்பிறகு அண்ணா நினைவிடத்துக்கு சென்று உதயநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கும் சென்று அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்று பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். பின்னர் தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார்.