பழங்குடியின மக்களின் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,310 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.265 பழங்குடியின மக்களுக்கு செலவிடப்படாமல் 2019-2020 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ. 10 கோடியும், 2020-2021 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ. 67.77 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு ரூ. 58.17 கோடிகள் என மொத்தம் ரூ.129.9 கோடிகள் பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, குடியிருப்பு வீடுகள், மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை திரும்ப அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய நிதி ஆண்டுகளில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘எந்தத் துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்த துறைகளிலேயே பணம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
ஆண்டுதோறும் மத்திய ,மாநில அரசுகள் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் துறைவாரியாக பவ்வேறு திட்டங்களும், இந்த திட்டங்கள் இவ்வளவு கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு, அவை செயல்பாட்டுக்கு வருவதற்குள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டே வந்துவிடுவது தான் பெரும்பாலான நேரங்களில் யதார்த்த நிலவரமாக உள்ளது. இந்த நிலையில்பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, முறையாக பயன்படுத்தப்படாததும், பிற துறைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுவதும் அந்த சமூக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பிட்ட திட்டங்களுக்கு குறித்த நேரத்தில் ஒதுக்கப்படும் நிதியை குறித்த காலத்தில் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்பதை அரசுத் துறை அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதையே இந்த வழக்கு உணர்த்துகின்றது.