அதானி துறைமுகத்திற்கு எதிர்ப்பு: பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000 பேர் மீது வழக்கு!

கேரள மாநிலத்தில், அதானி துறைமுக கட்டுமானத்திற்கு எதிராக போராடிய 3,000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு அருகே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் விழிஞ்சம் என்ற இடத்தில், ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி, துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த துறைமுக கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், அதானி துறைமுக கட்டுமானப் பணியை தொடர அனுமதி அளித்தது.

இதற்கிடையே, அதானி குழுமத்தின் துறைமுகம் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 மீனவர்களை, கேரள மாநில போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது, விழிஞ்சம் காவல் நிலையத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் பெண்கள் உட்பட 3,000 பேர் காவல் நிலையத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்திற்குள் புகுந்து சொத்துகளையும் சூறையாடியாதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் 36 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையை தடுக்கும் வகையில், போலீசாரும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில், 30 பேர் காயம் அடைந்தனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சம்பவ இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அதானி துறைமுக கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000 பேர் மீது கேரள மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவனந்தபுரம் லத்தீன் மறை மாவட்ட பேராயர் உட்பட மீனவர்கள் மற்றும் பாதிரியார்கள் மீது கொலை முயற்சி, கலவரம், அத்துமீறல், குற்றவியல் சதி மற்றும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையால், சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.