மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு சொல்லவில்லை: அண்ணாமலை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை எனவும், இந்த விஷயத்தில் திமுக அரசு மத்திய அரசின் மீது பழிப்போடுவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

இரண்டு மாதங்களுக்கு முன்பே மின் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்த திறனற்ற திமுக அரசு, தற்போது ஆதார் இணைப்பிற்குப் போதுமான அவகாசம் கொடுக்காமல் பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. எதற்காக மின்கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லாமல், ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்களை அவசரப்படுத்தியது திமுக அரசு. பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு தமது இந்த அறிவிப்பில் சற்று பின்வாங்கி, டிசம்பர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின்சாரக் கட்டணம் செலுத்தலாம் என கண்துடைப்பிற்காக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுமக்கள் தங்களது மின்கட்டண இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளமும் கடந்த சில நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. அதற்காக மின்சார வாரிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வரிசைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

மத்திய அரசின் மானியத் தொகை பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க, மத்திய அரசு ஒரு ஆண்டுக்கும் மேல் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அப்படி எந்தக் கால அவகாசமும் அளிக்காமல், அதற்கான காரணத்தையும் சொல்லாமல், மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று திடீரென அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது திமுக அரசு. இது மட்டும் இல்லாமல், இதற்கும் மத்திய அரசுதான் காரணம் என்று பழிபோடுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.

மத்திய அரசின் Revamped Power Distribution Scheme இல் மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் மானியத் தொகை வங்கி கணக்கு மூலமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். ஏழு நாட்களில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆகையால், திமுக அரசு, மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதுவரை மின் கட்டணம் செலுத்தவோ, மின்சார இணைப்பிலோ எந்தச் சிக்கலையும் உருவாக்கி, பொதுமக்களை வஞ்சிக்கக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.