கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான்: கனிமொழி

தமிழக ஆளுநர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான் என்று திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுதிடக்கோரி ஆளுநர் ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டம் காலாவதியாக நேற்றைய தினமே கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதனால், தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு சட்டம் இயற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கவேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் ஆர். என். ரவியை கடுமையாக சாடி வருகிறது. ஆன்லைன் ரம்மியால் இன்னொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு ஆளுநரே காரணம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழியிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி கூறியதாவது:-

கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான். ஆளுநர் இல்லையென்றால் இந்நேரம் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும். கவனர் பதவி என்பது தேவையே இல்லாத ஒன்று. அதை புரிந்துகொண்டு ஆளுநர் பதவியை ரத்து செய்தால் பல சிக்கல்கள் இருக்காது. எந்த காரணத்துக்காக ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஆளுநர் துடிக்கிறார் என்று தெரியவில்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.

அமைச்சர் துரைமுருகனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘ஆன்லைன் தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து பதில் கடிதம் எழுதி அவருக்கு அனுப்பியுள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது அவர்தான். அவரது முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்’ என்று அமைச்சர் துரைமுருகன் சாடினார்.