மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை!

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதையை உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மெரினா கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்கள் பொழுதை போக்கியும், கடல் அலைகளில் தங்கள் கால்களை நனைத்து உற்சாகம் கொள்வதும் வழக்கம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலின் அருகே சென்று கடல் அழகை கண்டு களிப்பது என்பது குதிரை கொம்பாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் மெரினா கடல் அலையின் அழகை கண்டு களிப்பதற்கு வசதியாக மரப்பலகையால் ஆன தற்காலிக பாதை அமைத்து அதனை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். இதற்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு (2022) மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ந் தேதிக்குள் நிரந்தர பாதை திறந்துவைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி, மெரினா கடற்கரையில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் மரப்பலகைகளால் ஆன நிரந்திர பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதனை உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மரப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுடன் கடற்கரை வரை நடந்து சென்று மாற்றுத்திறனாளிகளுடன் கடல் அழகை கண்டு களித்தார். சிறிது தூரம் மாற்றுத்திறனாளியின் சக்கர நாற்காலியை அவரே தள்ளிச்சென்றார்.

முன்னதாக தயாநிதி மாறன் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டிகளை உதயநிதி ஸ்டாலின் இலவசமாக வழங்கினார். மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாதை குறித்து மாற்றுத்திறனாளி ஒருவர் கூறும்போது, “கடற்கரை அழகை தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு கடலின் அழகை அருகில் சென்று பார்ப்பதற்கும், கடலில் கால் நனைக்கும் வாய்ப்பையும் வழங்கி உள்ளது இந்த மரத்தால் ஆன சாய்வு தளம். இது மெரினாவோடு நின்றுவிடாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தளங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 263 மீட்டர் நீளத்திற்கு மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இதன் மூலம் எளிமையாக கடலின் அருகே சென்று கடல் அழகை கண்டு களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இங்கு 20 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு ஆட்களை பணியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மரப்பலகை பாதை நாட்டிலேயே முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட திட்டமாக கருதப்படுகிறது. பெசன்ட் நகர் கடற்கரையில் இதே போன்று பெசன்ட் நகரிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அதற்கான அனுமதி வந்த உடன், அதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த மரப்பலகை பாதையானது நீரில் கெட்டுப்போகாத சிகப்பு மெரண்டி மற்றும் பிரேசிலின் வகை மரங்களால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை தினசரி பராமரிக்கும் வகையில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், மரப்பாதையில் ஆங்காங்கே சிறுசிறு பழுது ஏற்பட்டாலும் உடனடியாக சரிசெய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை சேதப்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.