அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் நடக்கும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் நடக்கும் என்று கூறினார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 26ஆம் தேதி இந்தியா அரசியலமைப்பு அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கிடையே தலைநகர் சென்னையில் தனியார் நிறுவனம் அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு விழா நடந்தது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

இந்த அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி 6 நாட்கள் பயணமாக 9 மாநிலங்களில் கால்பதித்து 6000 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளனர். இந்தியா முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்டு சென்றுள்ளனர். நமது நாட்டில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து எந்தவொரு பாடங்களும் இல்லை. இங்குள்ளவர்களிடம் அரசியலமைப்பு சட்டம் என்றால் என்ன எனக் கேட்டால் பலரும் தெரியாது என்றே சொல்லும் நிலையே இருந்தது. ஆனால், இதை மாற்றிக் காட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற உடன் பிரதமர் மோடி, நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக அறிவித்தார். இந்தியாவில் 1950இல் அரசியலமைப்பு சட்டம் அரசியல் சாசனமாகக் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு இருந்த எந்தவொரு பிரதமரும் யோசித்தது கூட இல்லை. ஆனால், பிரதமர் மோடி இதைச் செய்து அரசியலமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்திய நாடு சுதந்திரம் பெறும்போது, பிரிட்டன் மக்கள் என்னவெல்லாம் பேசினார்கள். இந்திய மக்களுக்கு சுயமாக நிர்வாகமே செய்யத் தெரியாது என்றார் பிரிட்டன் அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில். மேலும் இந்தியா சில ஆண்டுகளிலேயே துண்டு துண்டாகப் போய்விடும் என்றும் அவர் சொன்னார். ஆனால், இந்தியா உலக அரங்கில் கம்பீரமாக உள்ளது. அதேநேரம் பிரிட்டன் நாட்டிற்கு இந்திய வம்சாவளியின் ரிஷி சுனக் இப்போது பிரதமராகி உள்ளது நமக்குப் பெருமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பல கட்சிகள் சும்மா பெயருக்கு இருக்கிறார்கள். அவர்களில் பலர் தேசவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நாட்டிற்காகப் பாடுபடும் ராணுவ வீரரின் குடும்பத்தினரையும் விடாமல் மிரட்டி வருகிறார்கள். அந்த ராணுவ வீரருக்கு பாஜக எப்போதும் துணை நிற்கும். சில ஊடகங்களில் வரும் பொய்யான தகவல்களுக்கும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கும் பதிலளித்து என்னை நானே தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

தமிழக பாஜக சார்பில் விரைவில் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். இதற்குத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். மத்திய அரசின் திட்டங்கள் எந்தளவுக்குக் கிராமங்களைச் சென்றுள்ளது என ஆய்வு செய்யப் போகிறோம். குறைகள் இருந்தால், அதை விரைந்து சரி செய்து கொடுக்கவும் மத்திய அரசு தயாராகவே உள்ளது. மக்களைச் சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்துக் கேட்க விரைவில் இந்த சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளோம்.

தமிழக மக்கள் இப்போது திமுக அரசு மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழக அரசு மீது மக்களின் வெறுப்பு அதிகரித்த கொண்டே செல்கிறது. இவ்வளவு நடந்தும் கூட திமுக மாறியதாகத் தெரியவில்லை. இன்னுமே கூட திமுக தவறான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் திமுகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். பால் விலை உயர்வைக் கண்டித்து பாஜக மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தினோம். இதற்கு மக்கள் பெரியளவில் ஆதரவு அளித்தனர். இதுவே பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் பிரம்மாண்டமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.