நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் மூடப்படாது. எப்போதும் போலவே தொடர்ந்து செயல்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி அளித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. மன்ற கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:-
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.):- அம்மா உணவகம் நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு இதுவரை ரூ.756 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில அம்மா உணவகங்களில் மிக குறைந்த அளவிலேயே உணவுகள் விற்பனையாகிறது. எனவே ரூ.500-க்கு குறைவாக விற்பனையாகக் கூடிய அம்மா உணவகங்களை மூடி விடலாம். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேறு ஏதாவது வேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாமே.. (தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரும் இந்த கருத்தை அப்போது வலியுறுத்தினர்)
மேயர் பிரியா:- அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அதை குறிப்பிட்டால் அவை ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்தப்படும். அம்மா உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகிறேதா, அதுபோலவே இனியும் செயல்படும். ஊழியர்களை பொறுத்தவரையில் தேவைப்பட்டால் அந்த பகுதி கவுன்சிலர்களே நியமித்துக்கொள்ளலாம்.
ராஜசேகர் (அ.தி.மு.க.):- 600 சதுர அடிக்கு குறைவாக நிலம் வைத்திருப்போருக்கான சொத்து மற்றும் தொழில் வரி குறைக்கப்படுமா? மேலும் எனது வார்டில் இயங்கி வந்த மாநகராட்சி ஆஸ்பத்திரி இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. புதிய ஆஸ்பத்திரி கட்டப்படுமா?
மேயர் பிரியா:- இப்போதைய நிலையில் புதிய திட்டம் இல்லை. அதேவேளை வரிகள் குறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். என்று மேயர் பிரியா தெரிவித்தார்.