11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்த அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவா்கள் அனைவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. இது நாடு முழுவதும் பலத்த விமர்சனத்தை கிளப்பியது.

இந்த விடுதலைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுபாஷினி அலி, லக்னெள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ரூப் ரேகா வா்மா, ரேவதி லால் என்ற பத்திரிகையாளா் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைக்கு மூல காரணமாக அமைந்தது, குஜராத் அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதுதான். எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சீராய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கோரியுள்ளார். நாளை குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பில்கிஸ் பானு தரப்பு வழக்கறிஞர் ஷோபா குப்தா வலியுறுத்தினார். இதனையடுத்து இந்த மனு பரிசீலிக்கப்படும் என்றும் எந்த தேதியில் மனு விசாரிக்கப்படும் என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.

அதேபோல இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் குப்தா கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், விசாரணை முறையை நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்று கூறினார். குஜராத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பில்கிஸ் பானு மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.