கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான பின் விளைவுகளால் இறந்ததாகக் கூறப்படும் 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சிறுமிகளின் பெற்றோரின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது மத்திய அரசு.
கடந்த 2019 இறுதியில் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மக்களை அச்சுறுத்தி வந்தது. பாதுகாப்பு வழிமுறைகள், பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் வழிமுறைகளை பின்பற்றி வந்ததன் மூலமாகவும், கரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டதன் மூலமாகவும் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதே சமயம் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலர் இறந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர். லட்சத்திற்கு சிலருக்கு இம்மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சிறுமிகள் இறந்தனர். இதையடுத்து அவரது பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இறப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசிக்குப் பிறகு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமானால் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருத்துவ குழுவினை அமைக்க வேண்டும் என கோரிக்கையாக வைத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி இறப்புகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பாதகமான விளைவுகளால் இறந்ததாகக் கூறப்படும் இரண்டு சிறுமிகளின் பெற்றோரின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் 276 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறியுள்ளதாவது:-
தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு நபர் பாதகமான நிகழ்வுகள் காரணமாக உடலில் காயங்களோ அல்லது இறப்போ ஏற்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளி அல்லது அவரது குடும்பத்தினர், கவனக்குறைவு, முறைகேடு அல்லது தவறான செயல்களுக்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சேதம், இழப்பீடு கோரலாம். அதற்கு சட்டத்தில் பொருத்தமான தீர்வுகள் உள்ளன. அத்தகைய உரிமைகோரல்கள் வழக்குக்கு நீதிமன்றத்தில் வழக்கு அடிப்படையில் தீப்புகள் அளிக்கப்படலாம். ஆனால், கொரோனா கடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது.
மேலும், மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஒழுங்குமுறை மறுஆய்வுக்கு உள்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, நிகழும் மிகவும் அரிதான இறப்புகளுக்கு பொறுப்பேற்பது, குறுகிய நோக்கத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதற்கு மாநிலத்தை நேரடியாகப் பொறுப்பாக்குவது சட்டப்பூர்வமாக நிலையானதாக இருக்காது மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவது தன்னார்வமானது என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், “அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், தடுப்பூசி தன்னார்வமானது என்று தெளிவாகக் கூறும் மத்திய அரசு, தகவல் என்ற கருத்து. தடுப்பூசி போன்ற மருந்தின் தன்னார்வ பயன்பாட்டிற்கு ஒப்புதல் பொருந்தாது. பொது நலன் கருதி அனைத்து தகுதியான நபர்களும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஊக்குவிக்கும் அதே வேளையில், அதற்கான சட்டப்பூர்வ கட்டாயம் எதுவும் இல்லை. கண்காணிப்பு, விசாரணை மற்றும் பகுப்பாய்வுக்கான தற்போதைய வழிமுறை போதுமானது, பயனுள்ளது மற்றும் வெளிப்படையானது” என்று பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
மேலும், இறந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.