தமிழை விருப்ப மொழியாக சேர்க்க வடமாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன்: ஆர்.என்.ரவி

வடகிழக்கு மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக இணைக்க அந்தந்த மாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன் என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் பல்கலைக்கழகங்களின் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, மணிப்பூர் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் கிருஷ்ணன் பாஸ்கர், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல், பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 2017-18, 2019-20, 2020-21 ஆகிய 3 கல்வியாண்டுகளில் படித்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 922 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 406 பேருக்கு நேரடியாக பட்டங்களும், 49 பேருக்கு தங்கப்பதக்கமும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். அதனைத்தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது:-

நான் என் கிராமத்திற்கு செல்லும்போது எப்போதும் என் ஆசிரியர்களை சந்திக்க மறந்தது இல்லை. நீங்கள் பாடங்களை மட்டுமல்ல நல் ஒழுக்கங்களையும் கற்று கொடுக்கிறீர்கள். அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறோம். செயற்கை தொழில்நுட்பம், எந்திரவியல் என அனைத்திலும் மேம்பட்டு வருகிறோம். புத்தக கல்வி அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதைத்தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு புதுமைகளை அவர்களாக சோதனைப்படுத்தி கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இன்னும் தொடர்ந்து வளர வேண்டும். இந்த பட்டம் முடிவு கிடையாது. உங்கள் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நம் நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக நாம் இருப்போம். விதையை மரமாக வளர வைப்பதில் உங்களுக்கு பொறுப்பு உள்ளது. நாம் போட்டி நிறைந்த உலகில் இருக்கிறோம். சுலபமாக வளர்ச்சி இருக்காது. முயன்று முன்னேற வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. திருக்குறளை அனைத்து மாநில பாடத்திட்டத்திலும் வைக்க வேண்டும். இதற்காக அனைத்து மாநில மொழிகளிலும் அதை மொழிபெயர்க்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி 13 இந்திய மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார். இதுவும் பிரதமர் மோடி தமிழுக்குச் செய்த பெருமை தான். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா இன்னும் பல சாதனைகளைப் படைக்க உள்ளது. இதற்கு மாணவர்களின் பங்களிப்பு நமக்குத் தேவை. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக்குவது குறித்து அம்மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளேன். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. தமிழ் மொழியால் ஒட்டுமொத்த தேசமே பெருமை கொள்கிறது. தமிழ் இலக்கியம் தத்துவத்தால் தேசத்திற்குப் பெருமை. ஹரியானா முதல்வர் அழகாகத் தமிழ் பேசுகிறார். அவரிடம் எப்படி உங்களால் இவ்வளவு அழகாகத் தமிழ் பேச முடிகிறது என்று கேட்டேன். எப்படி தமிழை கற்றீர்கள் எனக் கேட்டேன். ஹரியானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விருப்ப மொழியாக இருந்து உள்ளது. ஆனால், பின் ஏதோ சில காரணங்களால் நீக்கப்பட்டு விட்டன. மீண்டும் அவற்றைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மற்ற வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளிடமும் தமிழ் மொழியை விருப்ப மொழியாக சேர்க்க பேசி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

அனைத்து கல்வி திட்டங்களிலும் இருக்கும் நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு உருவாக்கும் திட்டம்தான் நம்முடைய மாநில கல்வி கொள்கை திட்டம். அதை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகிற உங்களுக்கு, பல பட்டதாரிகளை உருவாக்குகிற பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று பல நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் செய்கிறார். வெறும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வு எழுதும் முறையை மட்டும் நம்ப கூடாது. பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். தொழில் சார்ந்த கல்வியை உருவாக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கல்வி நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அண்ணா சொன்ன இருமொழி கொள்கையிலே தமிழ்நாடு பயணிக்கிறது. ஆசிரியர்களை நம்பிதான் நாங்கள் இருக்கிறோம். வருங்கால சமுதாயத்தை உருவாக்குங்கள். பொது அறிவையும் சேர்த்து அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். மொழி அறிவையும், சமுதாய உணர்வையும் படிக்கும்போதே அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது அவசியம். கல்லூரிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தின் கல்வி வளர்ச்சி ஆரம்பக்கல்வியை பொறுத்துதான் உயர்கல்வி சிறப்பாக அமைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.