உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தொடர அனுமதிக்க முடியாது: மத்திய அரசு!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் காரணமாகவும், சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா காரணமாகவும் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியா திரும்பிய நிலையில் அவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க கோரி மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மாணவர்கள் தரப்பு வாதத்தில், ‘‘மனிதாபிமான அடிப்படையில் நான்காம், ஐந்தாம், ஆறாம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு இந்தியாவிலேயே நாம் வாய்ப்பு வழங்கலாம்’’ என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘‘உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம். இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் அதற்கு இடம் தராது. இந்தியாவில் தற்பொழுது இருக்கக்கூடிய மருத்துவ படிப்பு முறையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் உக்ரைன் போரினால் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ள மாணவர்களுக்கு உதவ நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக சில வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஆனால் இவர்கள் யாரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள். இந்தியாவில் படிப்பதற்கு இடம் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள். எனவே நமது நோயாளிகளை இவர்கள் கையாள்வதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு அடுத்த வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.