ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து குண்டுவெடிப்புகளும் வன்முறைகளும் வழக்கமான ஒன்றாகிவிட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 16 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானி குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.