புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்து. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர், கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பா.ம.க.கவுரவ தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதனை அடுத்து நிருபர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த 5 ஆண்டுகளில், ஆன்லைன் சூதாட்டத்தால் 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னைக்கு 2-வது விமான நிலையம் என்பது அவசியமானது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி. தமிழக அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பா.ம.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்களிடம் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம், ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது என்பதால், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனடு டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அறிவியல் உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்சி இயற்பியல் பட்டம் ஆகும். அதனால், எம்.எஸ்சி இயற்பியல் படிப்பவர்கள் இந்த பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே நாட்களில் பல்கலை. தேர்வுகளும் நடப்பதால் ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது!
2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும். அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் திசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.