என்னை யார் அதிகமாக விமர்சிப்பது காங்கிரசில் கடும் போட்டி: பிரதமர் மோடி

என்னைப்பற்றி தவறாக பேசுவதில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. குஜராத்தில் நேற்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். காந்திநகர் மாவட்டம் கலோலில் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு குடும்பத்தை நம்புகிறார்கள். ஜனநாயகத்தை அல்ல. ஒரு குடும்பம், அந்தக் குடும்பமே அவர்களுக்கு எல்லாமே தவிர, ஜனநாயகம் அல்ல. மோடியை குறித்து யார் அதிகமாக விமர்சிப்பது என்று காங்கிரஸ் கட்சியில் தினமும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். இது ராம பக்தர்களின் குஜராத் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது. “ராமபக்தர்களின்” இந்த நிலத்தில், “மோடி 100 தலை கொண்ட ராவணன்” என்று மல்லிகார்ஜூன கார்கே என்னை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு தாமரை அதிகமாக பூக்கும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் 2ம் கட்ட தேர்தலில் மக்கள் தாமரைக்கு வாக்களித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

காங்கிரஸ் பல ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் எனக் கூறி வருகிறது. வறுமையை ஒழிப்பதற்காக மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். ஆனால், நீங்கள் மக்களை வறுமையை ஒழிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தீர்கள். காங்கிரஸ் செய்தது ஒன்றே ஒன்று தான். முழக்கங்களை எழுப்புவது, வாக்குறுதிகள் அளிப்பது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவது. இதுதான் அவர்களின் ஆட்சியில் வறுமை அதிகரிக்கை காரணம். காங்கிரஸ் தலைமையிலான அரசுகளின் கொள்கைகளினால் சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் தங்களது பங்களிப்பை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும் ஏழை மக்களால் அவர்களுக்கென வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை.

ஏழை மக்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நாட்டின் மிக உயரியப் பதவிக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (திரௌபதி முர்மு) தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், தங்களது வேட்பாளரை அவருக்கு (திரௌபதி முர்முவுக்கு) எதிராக போட்டியிட செய்தார்கள். முர்மு நாட்டிலுள்ள அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும், குடிமக்களுக்கும் கிடைத்த பெருமை. ஆனால், அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை காங்கிரஸ் எதிர்த்தது. பழங்குடியினப் பெண் ஒருவரை அவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக பார்க்க விரும்பவில்லை. காங்கிரஸ் முர்முவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருக்கவில்லையென்றால் அவர் ஒருமித்த கருத்தோடு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.