பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது வேலை செய்யாத மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுத்தப்பட்டதா? என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார்.

சென்னையில் ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். இந்த விழாவில் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அப்போது பிரதமரின் பாதுகாப்புக்கு போலீசார் தேவையான ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டிருந்ததாகவும், பிரதமரின் பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமாக இருக்க வேண்டிய மாநில அரசு வைத்திருந்த ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகள் பல வேலை செய்யவில்லை என்றும் குறிப்பாக கையில் வைத்திருக்கும் மெட்டல் டிடெக்டர், டோர் மெட்டல் டிடெக்டர், கருவிகள் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் பெயரளவுக்கு இருந்ததை சில இடங்களில் போலீசார் வைத்திருந்ததாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணா மலை பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார். உலகிலேயே அதிக அச்சுறுத்தல் இருக்கும் மனிதர் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி தான். எனவே அவர் வந்த போது தமிழகம் சரியான பாதுகாப்பை வழங்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கடந்த 29-ந்தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம், அண்ணாமலையின் குற்றச்சாட்டு பற்றி நேற்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு சைலேந்திர பாபு பதில் அளிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படவில்லை. பாதுகாப்பு சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினர் எந்த குறையும் சொல்லவில்லை. பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாக அவர்கள் வாய்மொழியாக கூறி விட்டு சென்றனர். அது மட்டுமல்ல தமிழக காவல்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை. அவ்வப்போது பழைய உபகரணங்கள் மாற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக காவல்துறையில் பாதுகாப்பு உபகரணங்கள் 2 மடங்கு அதிகமாக உள்ளது. இவை நவீனமயமானதாக இருப்பதால் கேரளா மற்றும் அந்தமானில் இருந்து நமது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வாங்கி செல்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.

இந்த சூழலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அண்ணாமலை சொன்ன புகார் குறித்து இப்போது தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது வேலை செய்யாத மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுத்தப்பட்டதா? பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவான விளக்கம் தேவை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று விரிவாக விளக்கம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.