திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி, கவர்னர் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் தலை குனிய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நேற்று கவர்னர் ரவியை சந்தித்தார். இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குமாறு கூறியுள்ளோம். கூடிய விரைவில் பரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டும் என கோரினோம். ஆன்லைன் தடை மசோதா பரிசோதனையில் இருப்பதாக கவர்னர் ரவி தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் ரவி உறுதி அளித்துள்ளார். மசோதா குறித்து சில சந்தேகங்கள் உள்ளது. அதனை தெளிவுப்படுத்திக் கொண்டு, ஓப்புதல் தருவதாக கூறினார்.
இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று(நேற்று) பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜ., முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி, கவர்னர் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் தலை குனிய வேண்டும். ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.