ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. 10 நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரு ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அதன்படி, டிசம்பருக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருந்தது.
பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் நடப்பு மாதம் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு ருசிரா கம்போஜ் தலைமை வகிக்கவுள்ளாா். இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட உள்ள விவகாரங்கள் குறித்து குட்டெரெஸுக்கு அவா் எடுத்துரைத்தாா். ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா குரோசியையும் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா்.
தலைமைப் பொறுப்பின்போது பயங்கரவாதத் தடுப்பு, பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. பன்னாட்டு அமைப்புகள் சீா்திருத்தம் தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 14-ஆம் தேதியும், பயங்கரவாதத் தடுப்பு தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 15-ஆம் தேதியும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நடத்தவுள்ளது. அவ்விரு மாநாடுகளையும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முன்னின்று நடத்தவுள்ளாா். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனா்.
ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார். பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-
உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன. நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம். ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் பாடம் நடத்த தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.