சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியிருப்பதாவது:-
கல்வியிலும், சமூகத்திலும் கல்வியிலும், சமூகத்திலும் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இட ஒதுக்கீடு. அந்த வகையில், ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடுகளின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணி நியமன மற்றும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்திருப்பது, தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக அம்பலப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை ஐஐடியில், மொத்தம் 619 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 514 பேர் உயர்சாதியினராக இருந்து வருகிறார்கள். அதாவது சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்களில் 83 விழுக்காட்டினர் உயர்சாதியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இதில், 70 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள். பட்டியலினத்தை பொறுத்தவரை 619 பேராசிரியர்களில் 27 பேர், அதாவது 4.30 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளனர். பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் மட்டுமே சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் விழுக்காட்டில் வெறும் 1.30 மட்டுமே ஆகும்.இதன் வாயிலாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அவர்களுக்கு இல்லாத இட ஒதுக்கீட்டை, பிராமணர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு சென்னை ஐஐடி நிர்வாகம் வாரி வழங்கி இருப்பது கண்கூடாக தெரிகிறது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்காமல் அவர்களது கல்வி -வேலைவாய்ப்பு உரிமைகளில் மிகப்பெரிய தாக்குதலை சென்னை ஐஐடி நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருவது கண்டனத்துக்குரியது. எனவே, சென்னை ஐஐடியில் நிலவி வரும் இடஒதுக்கீட்டு ஏதிரான போக்கை களையவும், சமூக நீதியை நிலை நாட்டி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் உரிமையை பாதுகாக்கவும், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.