ஜல்லிக்கட்டை பார்க்க வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு அழைப்பு!

ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தமிழக அரசு வக்கீல் அழைப்பு விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) மதுரை அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை தமிழக அரசு வைத்தது.

தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, ‘ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பொழுதுபோக்கு போட்டி இல்லை. காலம் காலமாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும். 18 மாதம் முதல் ஆறு வயதுக்குள் இருக்கும் நாட்டுமாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்படும். அதன் பின்னர் வயது முதிர்ந்த காளை மாடுகளை வீட்டில் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, போட்டியில் பங்கு பெற சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதனை துன்புறுத்தல் என்று கூற முடியாது.’ என குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள், ‘ஜல்லிக்கட்டில் காளை அவிழ்த்து விடப்படும்போது அதனை அடக்குவதாக பலர் காளை மீது பாய்கிறார்களே?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘பலர் காளையை அடுக்குவதாக காளை மீது பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் அந்த காளையை விட்டு விடுவார்கள். போட்டி நடக்கும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் அந்த காளையின் மீது பாய்ந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விதி போட்டியின்போது மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது’ என தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.

நீதிபதிகள் எழுப்பிய கேள்வியில், 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன. இதனால் காளைகளுக்கு காயம் ஏற்படாதா? அங்கே ஏன் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இது வெறும் கேளிக்கை விளையாட்டு தானே. இதில் காளைகளின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் சார்பாக வாதம் வைத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில மரணங்கள் நடந்து இருக்கிறது உண்மைதான். ஆனால் இதை தடுக்கத்தான் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்தில் விதிகள் உள்ளன. இந்த விதிகள் காரணமாக மரணங்கள் தடுக்கப்படுகின்றன. இது வெறும் ஜாலிக்காக ஆடும் விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு என்பது வெறும் கேளிக்கை அல்ல. காளைகளை அவர்கள் இதற்காக இத்தனை வருடம் பழக்கப்படுத்தவில்லை. இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகளின் அங்கீகாரம் அதிகரிக்கும். அதன் மதிப்பு அதிகரிக்கும். காளைகளின் விலையும் மார்க்கெட்டில் அதிகரிக்கும். நாட்டு காளைகளை காக்க இது உதவும், என்று வாதம் வைத்தார்.

இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி கே எம் ஜோசப், நீங்கள் சொல்வது எல்லாம் இருக்கட்டும். ஆனால் காளைகள் மரியாதையோடு வாழ வேண்டுமே, அதற்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பயத்தை நாம் ஏற்படுத்த கூடாதே. நீங்கள் ஒரு விலங்கை பொம்மை போல பயன்படுத்த கூடாதே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கபில் சிபல், காளைகளுக்கு வலி, வேதனை இல்லை. இருக்கிறது என்றே வைத்துக் கொள்ளுவோம். மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடப்பது இல்லையா? பல விலங்குகளை வைத்து வேலைகளை செய்கிறார்களே? அது தவறு இல்லையா? ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடையாது. இதில் காளைகளின் வீரத்தை காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதை காட்டுகிறது. குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளை பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பது இல்லை? காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது கண்களில் மிளகாய் பொடி தூவுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். காளைகள் இவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் போல. பெற்ற பிள்ளைகளை யாரவது இப்படி நடத்துவார்களா? இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகள் உயிர் வாழ்கின்றன. அந்த காளைகளுக்கு நோய்கள் வரலாம். ஆனால் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகளை இவர்கள் சிறப்பாக பாதுகாக்கிறார்கள். இல்லையென்றால் வெளிநாட்டு காளைகள் அந்த இடத்தை பிடித்துவிடும். ஜல்லிக்கட்டுதான் நாட்டு காளைகளை பாதுகாக்கிறது. சர்க்கஸ் போல ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை கிடையாது, என்று கூறினார்.

இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி ஜோசப், ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு காளைகள் பாதுகாக்கப்படுகிறது என்று எப்படி சொல்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கபில் சிபல், ஜல்லிக்கட்டுக்கு பின்பாகவே காளைகளை, மாடுகளுடன் இணைய வைப்பார்கள். இனப்பெருக்கம் செய்ய வைப்பர்.ஜல்லிக்கட்டு நடக்காத சமயத்தில் இந்த இனப்பெருக்கம் நடக்காது. பாரம்பரிய இந்திய காளைகளை காக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதில் என்ன தவறு இருக்க முடியும், என்று பதில் அளித்தார்.