மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் துணை நிற்போம்: வைகோ

மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் தோள் கொடுப்போம்; துணை நிற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளியான ஹெலன் கெல்லர் அம்மையார், நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் வாழ்ந்து காட்டினார். “என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடினும், என்னாலும் சிலவற்றை செய்ய முடியும்” என்றார் ஹெலன் கெல்லர். மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்நாள் நெடுகிலும், வேதனையில் உழல்கின்றார்கள். நாகரிகம் வளர்ந்து விட்ட இந்த 21-ஆம் நூற்றாண்டிலும், மாற்றுத்திறனாளிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வருத்தத்துக்கு உரியது.

சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வழியில் இருக்கின்ற தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். காலத்தால் கைவிடப்பட்டவர்களாக, நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடும் மாற்றுத் திறனாளிகள், சாதிக்கப் பிறந்தவர்கள்.

திருப்பதி தேவஸ்தானம் பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாக சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றத்தின் மூலம் அறுவை மருத்துவம் செய்து, மருத்துவக் கருவிகளை வழங்கி, மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்தேன். மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழகும் கருவிகள் அவர்களுக்குக் கிடைத்திட இன்றளவும் இடைவிடாது தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறேன். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசி இருக்கின்றேன். மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் தோள் கொடுப்போம்; துணை நிற்போம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர்களுக்கு உலக மாற்றுத் திறனாளிகள் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.