கொலிஜியம் அமைப்பு முறை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையாக பேசி வருவது அநாகரீகமானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் தலையிடுவது சரியானது அல்ல என கிரிண் ரிஜூஜூ பேசி வந்துள்ளார். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் மோடி அவரது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி இது தொடர்பாக தனது டுவிட்டரில், “கொலிஜியம் நீதிபதிகளை தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் தலையிடக்கூடாது. நீதிபதிகளின் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது சில நேரங்களில் மறுக்கலாம். ஆனால் இது குறித்து அமைச்சர் கூறியிருக்கும் கருத்து அநாகரீகமானது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அவர்களுக்கு தெரியாதவர்களை தேர்வு செய்வதில்லை என்று அமைச்சர் கூறுகிறார். பிரதமர் மோடி அவரது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?” என கேள்வியெழுப்பி இருக்கிறார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.