மாநில ஆளுநர்கள் நியமனம் செய்யப்படும் விவகாரத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவர், பகத் சிங் கோஷ்யாரி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார். இந்த கருத்துக்கு, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதி. அத்தகைய பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பதற்கு சில அளவுகோல்கள் இருக்க வேண்டும். ஆளுநர் நியமனத்தில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டம் இயற்றப்பட வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு தான் சொந்தம். அங்கு மராட்டிய மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். இது போல பல பகுதிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன. அவற்றையும் மகாராஷ்டிர மாநிலத்துடன் இணைக்க வேண்டும்.
சத்ரபதி சிவாஜி, ஜோதிபா பூலே ஆகியோரை அவமதிக்கும் வகையில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியது சரியல்ல. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அமைதி காக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.