கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக கோயில்களில் 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, 31 ஜோடிகளுக்கு ரூ.72,000 மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ள இந்த திருமண விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல் பாபு என பல இடங்களில் நான் தெரிவித்துள்ளேன். அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரை வேலைவாங்க கூடியவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறார். கோவில்களில் அர்ச்சனையை தமிழ் மொழியில் மேற்கொள்ள செய்துள்ளோம். அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனங்களை செய்துள்ளோம்.
கோயில் பொது சொத்துகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். ரூ.3,700 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கல்லூரிகளை அரசு தொடங்கி இருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமையை மீட்டு தந்திருக்கிறது திமுக அரசு. மன்னராட்சி ஆனாலும் சரி, மக்களாட்சியாலும் சரி கோயில் என்பது மக்கள் சொத்து தான். கோயில்கள் என்பது மக்களுக்கானது, கோயில் ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல. கோயில் மக்களுக்கு என்பதற்குத்தான் நீதிக்கட்சி ஆட்சியில் இந்த துறை உருவாக்கப்பட்டது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை கருணாநிதியை சேரும். வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி நடத்தி வருகிறேன்.
இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால் தான் அவர்கள் பொய், பித்தலாட்டத்தை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழையில் சிரிப்பில் இறைவனை கான்பவர்கள் நாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற முறையில் நாம் பணிகளை செய்துவருகிறோம். அதன் அடையாளம் தான் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 31 இணையர்களுக்கு மணவிழாவை நாம் நடத்திமுடித்துள்ளோம்.
5 முறை கருணாநிதியிடமும் 6ஆவது முறை தமிழக ஆட்சியை அவரது மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். ஆட்சிய அமைத்த போது செய்தியாளர்களிடம் நான் சொன்னேன், இது வாக்களித்தவர்களுக்கு மட்டுமான ஆட்சியாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும்.. வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் வாக்களிக்காதவர்கள் இப்படியொரு ஆட்சிக்கு வாக்களிக்கத் தவறிவிட்டுமே என வருத்தப்படுவார்கள். இல்லற வாழ்க்கை மணமக்கள் 2 குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்பட்டு வருகிறது. முன்பு நாம் இருவர் நமக்கு மூவர், அது பின் முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் ஆச்சு. இப்போது முன்பு நாம் இருவர் ஒருவர். இது மேலும் பின்னாளில் முன்பு நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று கூட மாறலாம். குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். இல்லற வாழ்க்கையில் சமத்துவத்தை கடைப்பிடியுங்கள். இதை நான் முதல்வராக இல்லாமல் உங்கள் தந்தையாகவே கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.