எத்தனையோ கவர்னரை பார்த்துள்ளேன்; இவரை போல் பார்த்தது இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மதுரை ஆதீனம் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்ற கீதாமிர்தம் 2022-சம்ஸ்கிருத பாரதி தமிழ்நாடு அமைப்பின் கீதை ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் பேசியதாவது:-
பாரதநாட்டில் பிறப்பது புண்னியம்.. அதை விட புண்னியம் தமிழ்நாட்டில் பிறப்பது.. அதை விட புண்ணியம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது. மகாகவி பாரதி சொன்னார் பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று.. அமெரிக்காவைவோ, ஜப்பானையோ சொல்லவில்லை.. பாரத நாட்டை தான் சொன்னார். ஏன் என்றால் இது ஆன்மீக நாடு. எத்தனையோ கவர்னரை பார்த்துள்ளேன்; இவரை போல் பார்த்தது இல்லை. ஒரு மனிதன் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது.. வல்லவராகவும் இருக்க வேண்டும். அதில் நம்பர் ஒன் இவர் என கவர்னரை குறிப்பிட்டு சொன்னார் மதுரை ஆதினம்.
சிங்கார சென்னை என்று சொல்கிறார்கள்.. கூவம் சென்னையாகதான் இருக்கிறது. இந்த சென்னையில் இப்படி அருமையான ஒரு நிகழ்வு நடக்கிறது. கவர்னருக்கு எத்தனையோ எதிர்ப்பு; என்னையும் எத்தனையோ பேர் எதிர்க்கிறார்கள். இவர் உறங்கி கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இவர் ஓடவும் இல்லை.. உறங்கவும் இல்லை.. ஆன்மீகத்தில் உறைப்பான சிங்கக்குட்டி என கவர்னரை குறிப்பிட்டார்.
ராமகிருஷ்ண பரம்ம ஹம்சர் சொன்னது போல எங்கே எதிர்ப்புகள் அதிகம் இருக்கிறதோ.. எங்கே ஆறுதல் சொல்ல ஆள் இல்லையோ அங்கே தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்பதை கடைபிடிப்பவர் கவர்னர்.. மனிதன் புணிதனாக வேண்டும். கிருஷ்ணன் என்பதற்க்கு சுரண்டுதல் என்பது பொருள்.. தீமையை சுரண்டி நன்மையை அளிப்பவர் என்று பொருள். இப்போழுதும் பாண்டவர்கள், கவுரவர்கள் உள்ளனர். தற்போது அரசியல்வாதிகளிடம் கேட்டால் கவுரவர்கள் தான் நல்லவர்கள் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் அவர்களிடம் தான் அதிக ஓட்டு உள்ளது. பாண்டவர்களிடம் வெறும் 5 ஓட்டு தான் உள்ளது. என்று சொல்லுவர்கள். அப்படிதான் தமிழ்நாடு உள்ளது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பார்கள்; ஆனால் இவர்கள் என் கடன் மணி(Money) செய்து கிடப்பதே என்று இருக்கிறார்கள்.
தற்போதைய இளைஞர்களிடம் தேச பக்தி குறைந்து விட்டது. எங்கும் நிம்மதி, அமைதி இல்லை, எங்கு பார்த்தாலும் குண்டு வைக்கிறான். எங்கும் நிம்மதி இல்லை; ஆனால் பகவத் கீதை, கம்பராமாயணம், பெரிய புராணம், மகாபாரதம் எல்லாம் நமக்கு நிம்மதி அளிக்கிறது. உணவு எப்படி சாப்பிடுகிறமோ அந்த புத்தி தான் நமக்கு வரும்.. அதனால் அனைவரும் சைவ உணவு சாப்பிட வேண்டும்.. பறப்பது, தாவுறது எல்லதையும் உண்ணுகிறார்கள். டாக்டர்.. ஐ.ஏ.எஸ் படிக்க எல்லாம் 5 வருடம்.. ஆனால் சாமியை பூஜை செய்பவர் படிக்க மட்டும் ஒரு வருடம் என்பது நியாயமா? சாமியை பற்றி அவனுக்கு எல்லாம் தெரிய வேண்டும். வேதங்கள், புராணங்கள், திருமுறைகள் என அனைத்தையும் படித்து தெரிந்துகொள்ள ஒரு வருடம் போதும் என்பது சரியான முறை அல்ல.. இதை அரசிற்கு ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். பெரியவர்களிடம் பேசி இது தொடர்பாக அரசு முடிவு செய்ய வேண்டும்.
நமது கவர்னர் அனைத்து ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் கலந்து கோள்கிறார். மதுரைக்கு வரும் போது ஆதீனத்திற்கும் வர வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை வைக்கிறேன். இப்பொது பலருக்கு சாமி கும்மிட நேரம் இல்லை. ஆனால் ஜீன்ஸ் போட, அலங்காரம் பன்ன நேரம் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆங்கிலம் அதிகமாகிவிட்டது. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போனாலும் அவன் மொழியும்.. சமயமும் நம் நாட்டை விட்டு போக வில்லை. நம் சமயத்தை போல உலகில் வேறு சமயம் கிடையாது. மருது பாண்டியன், ராஜராஜ சோழன் கட்டிய அரண்மனைகள் இல்லை.. ஆனால் அவர்கள் கட்டிய கோவில்கள் உள்ளது. எனவே ஆன்மீகம் என்றும் நிற்கும்; அரசியல் அழிந்து போகும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பகவத் கீதையை படிக்க, படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பகவத் கீதையை மனப்பாடம் செய்ய எளிமையாக அழகாக இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் ஈர்க்கப்படுகிறார்கள். எனது ஆரம்பப் பள்ளி, கல்லூரி மற்றும் நான் என்னை ஊக்குவித்து, நான் எதைப்பெற வேண்டும் அந்த வகையில் எனக்கு உதவுகிறது. மக்களின் பங்களிப்பு அனைத்திலும் இருக்க வேண்டும் என்று இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமைதியான உலகத்திற்கு இந்தியா தான் தலைமை பண்பை வழங்கும் என்றும் இந்தியா வேகமாக வளரும் உலக பொருளாதாரத்தை வெல்லும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஜி 20 அமைப்பில் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை” என பேசினார்.