திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை செய்யலாம் என தமிழக போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் போக்சோ சட்டம் நடைமுறைத்தப்பட்டது.
இந்த நிலையில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மதுரை அருகே அரசு பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தனக்கு வேண்டாத ஆசிரியர்கள் குறித்து அப்பள்ளி மாணவிகள் புகார் அளித்ததை போன்று சைல்ட் லைனுக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நில தகராறு, தனிப்பட்ட விரோதம் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. திருமணம் காதல் விவகாரங்களிலும் போக்சோ சட்டத்தினால் கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை செய்யலாம் என தமிழக போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். இதன்படி திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரி மற்றும் எதிர் மனுதாரர்களை விசாரணை செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய வேண்டும். முக்கிய வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.