அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவையொட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். அது போல் ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ தீபாவும் அவரது கணவர் மாதவனும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த முறை ஜெ தீபாவுக்கு 11 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தனது குழந்தையுடன் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்கிறார் ஜெ தீபா. போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு தனது கணவர் மாதவன், ஆதரவாளர்களுடன் சென்ற ஜெ தீபா அங்கு வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது:-
“என்னுடைய மறைவுக்குப் பின்னால் நூறாண்டுகள் இந்த கட்சி இருக்கும்” என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார் ஆனால் நூறு நாட்கள் கூட இவர்கள் கட்சியை முறையாக வழிநடத்தவில்லை. ஜெயலலிதா மர்ம மரணம் விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தது போல சசிகலாவின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை தேவை. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இவர்கள் யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியற்ற தலைமைகள். நான் மீண்டும் அரசியல் வர வாய்ப்பே இல்லை. எனக்கு ஒட்டுமொத்தமாக அரசியலை பிடிக்கவில்லை. தனித்தனி பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக இனி கால போக்கில் சிதைந்து தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை ஏற்படும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் தங்களுடைய சுயநலத்திற்காக பாடுபட்டு வருகின்றனர். கட்சியின் நலனுக்காக யாரும் பாடுபடவில்லை. ஜெயலலிதாவை போல் அதிமுகவை வழிநடத்த தலைவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.