கடல் எல்லை பகுதியில் வடகொரியா பீரங்கி தாக்குதல்!

தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் வடகொரியா இன்று 130 முறை பீரங்கி குண்டு வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சியோல், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரியா எல்லைகளை குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரியா ராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தென் கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.