நாடு முழுவதும் மோசடியான மற்றும் ஒருவரை நம்ப செய்து ஏமாற்றும் வகையிலான கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என்ற பொதுநல மனு மீது டிசம்பர் 12-ல் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்த முடிவாகி உள்ளது.
நாடு முழுவதும் மோசடியான மற்றும் ஒருவரை நம்ப செய்து ஏமாற்றும் வகையிலான கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என்று வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஏற்படும் தீங்குகள் அதன் தொடர் விளைவுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மோசடியான மதமாற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அறிக்கை தயார் செய்தும் மற்றும் சட்டமசோதாவை உருவாக்கவும் மத்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனை நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதுபற்றி கடந்த வாரம் நீதிபதி அமர்வு கூறும்போது, கட்டாய மதமாற்றம் ஒரு மிக தீவிர விவகாரம் என்றும் அது நாட்டின் பாதுகாப்பை பாதிக்க கூடும் என்றும் குறிப்பிட்டது. தொடர்ந்து, இது மிக ஆபத்து ஏற்படுத்தும் விசயம். ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. அப்படியானால், இந்த கட்டாய மதமாற்றம் என்பது என்ன? என அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், மதமாற்ற ஒழிப்பு சட்டங்கள் பற்றி மாநில அரசுகளிடம் இருந்து போதிய தகவல்களை சேகரித்து அதுபற்றி விரிவான பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. கட்டாய அல்லது மோசடியான மதமாற்றம் ஒரு தீவிர விவகாரம் என குறிப்பிட்ட கோர்ட்டு, தொடர்ந்து இந்த மனு மீது நடைபெறும் விசாரணையை வரும் டிசம்பர் 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது.