அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளித்துள்ளது: பிரதமர் மோடி

பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு தலைவர்கள் மரியாதை. குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாபரிநிர்வாண் தினத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.