குழந்தைகளுக்கு ‘துப்பாக்கி, வெடிகுண்டு’ என பெயர் வைக்க வட கொரியா உத்தரவு!

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள், துப்பாக்கி உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட கொரியா, தனது நாட்டு மக்களுக்கு தேசப் பற்றை வளர்க்கும் என்ற அடிப்படையிலான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. இது பற்றி தி மிரர் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் மற்றும் விசுவாசம், துப்பாக்கி போன்ற பெயர்களை சூட்ட வேண்டும் என வட கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது போன்ற பல பெயர்களை அவர்கள் அறிவித்து உள்ளனர். இந்த பெயர்கள் எல்லாம், தேசப்பற்றை மக்களிடையே வளர்க்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு, ‘அன்புக்குரிய ஒருவர்’, ‘பேரழகு’ என தென் கொரியா நாட்டில் உபயோகித்தது போன்ற அன்பு சார்ந்த பெயர்களை வட கொரியா அனுமதி அளித்திருந்தது. எனினும், இனி இந்த பெயர்களை சூட்ட ஊக்கம் அளிக்கப்படாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு, இது போன்ற அன்புக்குரிய பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பின், உடனடியாக அவற்றை தேசப்பற்று நிறைந்த பெயர்களாக பெற்றோர்கள் மாற்ற வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசின் இந்த உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த பெற்றோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.