அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் தவிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வித்துறையில் நிர்வாக சீர்திருத்தத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளதாவது:-

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த இருமாத காலமாக ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நிர்வாகச் சீர்திருத்தத்தை காரணம் காட்டி ஊதியம் வழங்காமல் ஆசிரியப் பெருமக்களின் குடும்பங்களை வறுமையில் வாடவிடுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி இயக்குநர் பணியிடங்களும் தற்போது தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, தனியார் கல்வி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 32 புதிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கும் வகையில் ஆணையிடப்பட்டு அதற்கேற்ற வகையில் இணையதளத்தில் உள்ளீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் கடந்த இரு மாதங்களாக அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்திவருவதால் ஆசிரியப் பெருமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இணையத்தில் பதிவேற்றம் செய்து வங்கி மூலமாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் நிலவுமாயின், அதுவரை அவர்களுக்கு நேரடியாக ஊதியத்தை வழங்கி இருக்கலாமே? அதை செய்யத்தவறி, மாத ஊதியத்தையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் ஆசிரியப் பெருமக்களையும், அலுவலர்களையும் தவிக்கவிடுவது நியாயம்தானா? ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 26 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருமாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.